மே 29-ல் பிசிசிஐ ஆலோசனை கூட்டம்!
இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திட்டமிட்டபடி டி20 உலக கோப்பை போட்டியை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒருவேளை இந்தியாவில் தொடரை நடத்த முடியாவிட்டால், வெளிநாடுகளில் தொடரை நடத்த பிசிசிஐ முயற்சி மேற்கொள்ளலாம். போட்டியை நடத்த இன்னும் அதிகமான நாட்கள் உள்ளதால், தற்போது இது குறித்து முடிவு எடுக்க வேண்டியதில்லை.
இருந்தாலும், வருகிற 29ஆம் தேதி பிசிசிஐயின் சிறப்பு வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தின் போது ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்தும், உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள், டி20 உலகக்கோப்பை தொடர் குறித்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
கடுமையான பயோ பபுள் சூழலில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற பொழுதே, வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்தப்படுமா என்பது குறித்து கூட்டத்தின் முடிவிலேயே தெரியவரும்.