பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ!
நடப்பாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்காக பிசிசிஐ பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. ஏற்கனவே எட்டு அணிகள் உறுதி ஆகிவிட்ட நிலையில், மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்கு மற்ற அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
இந்தியாவில் மொத்தம் 11 மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் காரணமாக 11 மைதானங்களும் சீரமைப்பு செய்யப்பட்டு இப்போதே பல்வேறு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து உலக கோப்பையில் விளையாட மாட்டோம். ஏனெனில் இந்திய அணி இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கு சென்று விளையாட மாட்டோம் என்று தெரிவித்துவிட்டது. அதன் காரணமாக பாகிஸ்தான் இப்படி முரண்டு பிடித்து வந்தது.
பின்னர் இந்தியாவிற்கு வந்து விளையாடுவதற்கு தயார். ஆனால் நாங்கள் கேட்கும் மைதானங்களில் அனுமதி கொடுக்க வேண்டும். தங்களுக்கான உலகக்கோப்பை போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடத்தக்கூடாது. மற்ற இடங்களில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். முன்னர் அகமதாபாத் மைதானத்தில் விளையாடமாட்டோம் என சொன்ன பாகிஸ்தான் அணி, தற்போது சென்னை மைதானங்களில் விளையாட மாட்டோம் என்று அடம் பிடித்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசுகையில் “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு காரணம் அவர்கள்தான். முதலில் அவர்கள் அகமதாபாத் மைதானத்தில் விளையாட தயாராக இல்லை. பிறகு சென்னையில் விளையாட தயாராக இல்லை, இப்பொழுது பெங்களூரில் விளையாட தயாராக இல்லை.
அவர்கள் எப்பொழுதும் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள். போட்டி அட்டவணையில் உங்களது பலம் மற்றும் பலவீனத்தின் அடிப்படையில் மைதானங்களை கேட்கத் தொடங்கினால், அது உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணைகளை வெளியிடுவதில் பெரிய சிரமத்தை உண்டாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.