ஐபிஎல் 2022: கலை நிகழ்ச்சிகளுடன் இறுதிப் போட்டி!
15ஆவது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச்26ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 5 போட்டிகளை பூர்த்தி செய்துவிட்டன.
கடந்த ஆண்டை போல இந்தாண்டும் கரோனா பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு முடிவையும் மிக கவனத்துடன் எடுத்து வருகின்றனர். அதற்கேற்றார் போல லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. விமான போக்குவரத்து முற்றிலும் பயன்படுத்தப்படவில்லை.
மெகா ஏலம், 10 அணிகள், புது வீரர்கள் என பல சுவாரஸ்யங்கள் நிறைந்துள்ள போதும் ரசிகர்களுக்கு ஒரு குறை இருந்துக்கொண்டே தான் உள்ளது. அதாவது போட்டிகளுக்காக ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் இல்லை என்பது தான். ஐபிஎல் போட்டிகள் எப்போதுமே பல கலைநிகழ்ச்சிகளுடன் தான் தொடங்கும். கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக எதுவுமே நடைபெறவில்லை.
இந்நிலையில் நடப்பு சீசனில் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை பிரமாண்ட நிகழ்ச்சிகளுடன் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடன கலைஞர்கள், திரையுல பிரபலங்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பணிகள் தொடங்கிவிட்டன.
ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகள் லக்னோ மற்றும் கொல்கத்தா மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியை அகமதாபாத் மோதிரா மைதானத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு இந்திய ரசிகர்கள் சூழ தான் இறுதிப்போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.