டி20 உலகக்கோப்பை: இந்திய அணி குறித்து கங்குலி அப்டேட்!

Updated: Sun, Jun 19 2022 11:13 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. அதேசமயம் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று 15 ஆண்டுகளாகிறது. அதேபோல் ஐசிசி கோப்பையை கடைசியாக வென்றது 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தான். இதனால் இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.

கடந்த டி20 உலககோப்பையில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வி, லீக் சுற்றிலேயே வெளியேற்றம் போன்ற அவமானங்களை இந்திய அணி சந்தித்துள்ளது. தற்போது புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என அனைத்திலும் புதுமையை பிசிசிஐ புகுத்தியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

இதற்கான இந்திய அணியை தயாரிக்கும் பணியை ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா கூட்டணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதன் படி, தற்போது சீனியர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு, பிற வீரர்களை வைத்து தென்னாப்பிரிக்காவுடன் டி20 தொடரில் இந்தியா மோதுகிறது. ஆனால் இந்த தொடரில் ஐபிஎலில் கலக்கிய உம்ரான் மாலிக், ஆர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

ஒரே வீரர்களை வைத்து தான் தற்போது வரை 4 போட்டியிலும் இந்தியா விளையாடி இருக்கிறது. இதனால் உலகக் கோப்பைக்கான அணியை தயாரிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, “டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட போகும் வீரர்களுக்கு வரும் இங்கிலாந்து தொடர் மூலம் வாய்ப்பு அளிக்கப்படும்.

டிராவிட்டை பொறுத்தவரை 11 வீரர்களை தேர்வு செய்துவிட்டார். தற்போது அவர்களுக்கு பல்வேறு போட்டிகளில் விளையாட தொடர்ந்து வாய்ப்பு தருவார். இதன் மூலம் 11 வீரர்களுக்கும் தாங்கள் என்ன செய்ய வேண்டும், நெருக்கடியை எப்படி சமாளிக்க முடியும் என்பது குறித்து தெரியும்” என்று அவர் கூறினார். 

இங்கிலாந்து டி20 தொடரில் கோலி,ரோஹித், பும்ரா , ஜடேஜா ஆகியோர் திரும்பினால், மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை