விராட் கோலியின் ஃபார்ம் குறித்து மௌனம் கலைத்த சௌரவ் கங்குலி!
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லண்டனில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அண்மைக்காலமாக விராட் கோலி ரன் அடிக்க முடியாமல் திணறி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 மற்றும் 20 ரன்கள் மட்டுமே விராட் கோலி எடுத்துள்ளார்.
டி20 போட்டியில் 1 மற்றும் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலியை விட சிறப்பாக விளையாடும் வீரர்கள் அணியில் இருந்த நிலையில் அவர்களது இடம் திடீரென விராட் கோலிக்காக நீக்கப்பட்டது.
இதனால் விராட் கோலியை ஏன் அணியில் வைத்திருக்கிறீர்கள் என்று பல முன்னாள் வீரர்கள் போர்க்கொடி தூக்க தொடங்கிவிட்டனர். தற்போது முதல் முறையாக விராட் கோலி குறித்து மௌனம் கலைத்துள்ள பிசிசி ஐ தலைவர் கங்குலி, “விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட்டின் ரெக்கார்டை பாருங்கள். திறமையும், உத்வேகமும் இல்லை என்றால் இவ்வளவு சாதனை படைத்திருக்க முடியாது.
விராட் கோலிக்கு தற்போது கடின காலம் நிலவி வருகிறது . அது அவருக்கே தெரியும். விராட் கோலி ஒரு சிறந்த வீரர். விராட் கோலி தாம் நிர்ணயித்த உயரத்தை தற்போது தொடுவதில்லை என்று அவருக்கு தெரியும். ஆனால் விராட் கோலி இதுபோன்ற சூழ்நிலையில் இருந்து சிறப்பாக ரன் குவித்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இம்முறை அவர் விரைவில் ரன் குவிக்க வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
அவர் மீண்டும் வெற்றியாளராக அணியில் இருக்க வேண்டும். அது விராட் கோலியால் மட்டும் தான் செய்ய முடியும்.விளையாட்டில் இது போன்ற நிலை அனைத்து வீரர்களுக்கும் ஏற்படும். சச்சினுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. ராகுல் டிராவிட்டுக்கும் இது போன்ற நிலை ஏற்பட்டது . ஏன் எனக்கும் ரன் குவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அது கோலிக்கு ஏற்பட்டுள்ளது. நாளை வேறொரு இளம் வீரருக்கு ஏற்படும்.
இது விளையாட்டின் ஒரு பகுதி, ஒரு விளையாட்டு வீரராக உங்கள் மனம் என்ன சொல்கிறது என்று கவனித்து களத்துக்கு சென்று உங்களுடைய இயற்கையான விளையாட்டு ஆட வேண்டும் என்று விராட் கோலிக்கு கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார்.அணியை விட்டு நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்த நிலையில் விராட் அவருடைய வலிமையை கண்டுபிடித்து ரன் அடிக்க வேண்டும்” என கங்குலி கூறி இருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.