ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின், மிதாலி ராஜ் பெயர் பரிந்துரை!
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி 2017 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரா், வீராங்கனைகள் பெயா்களை பரிந்துரைக்கின்றன.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் என இரு தமிழர்களின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.
மேலும் அர்ஜுனா விருதுக்காக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, பேட்ஸ்மேன்கள் கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 34 வயதாகும் ரவிச்சந்திரன் அஸ்வின், 79 டெஸ்ட், 111 ஒருநாள், 46 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
அதேபோல் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோரது மகள் மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் ஹைதராபாத்துக்கு இடம்மாறியது. 38 வயதாகும் மிதாலி ராஜ் இதுவரை 11 டெஸ்டுகளிலும் 215 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.
முன்னதாக கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு, ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் உள்ளிட்ட ஐந்து பேருக்குக் கடந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.