மாற்றுத்திறனாளிகளுக்கான கமிட்டியை உருவாக்கியது பிசிசிஐ!
முதல் முறையாக கிரிக்கெட் விளையாடும் மாற்றுத் திறனாளிகளுக்கு எனத் தனியாக ஒரு கமிட்டியைத் தொடங்கி உள்ளது பிசிசிஐ. இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான மிகப்பெரும் கமிட்டி ஆக செயல்பட பிசிசிஐ இந்த தொடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்கள் இனி பிசிசிஐ என்னும் பெரும் பேனரின் கீழ் விளையாட முடியும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் வாரியத்தை DCCI கடந்த ஏப்ரல் மாதம் அங்கீகரிப்பதாக பிசிசிஐ முடிவு செய்திருந்தது. இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் வாரியம் மூலம் உடல் அளவிலான மாற்றுத் திறனாளிகள், காது கேளாதோர், பார்வை இல்லாதோர், மற்றும் சக்கர நாற்காலியில் அமர்ந்த விளையாடுவோர் என அனைவரும் இணைக்கப்படுவர்.
இது மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தெரிவித்துள்ள பிசிசிஐ, “மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள நாங்கள் ஒரு கமிட்டியை அதிகாரப்பூர்வமாக உருவாக்கி உள்ளோம். இந்த கமிட்டி தற்போது பிசிசிஐ-ன் துணை கமிட்டி ஆக செயல்படும். இதன் மூலம் மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்கள் இனி பிசிசிஐ பேனரின் கீழ் விளையாடுவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ எடுத்து அறிவித்துள்ள இந்த சிறப்பான முயற்சிக்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய பெண்கள் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் மிதாலி ராஜ் பிசிசிஐ-க்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.