ENGW vs SAW, 3rd ODI: பியூமண்ட் அசத்தல் சதம்; தென் ஆப்பிரிக்கவை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற 2 போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை வென்றவது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லிசெஸ்டரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமண்ட் - எமா லாம்ப் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் எமா லாம்ப் 65 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய டாமி பியூமண்ட் சதமடித்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய டங்க்லி, கேப்டன் ஹீதர் நைட் ஆகியோரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அயபோங்கா காகா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் ஆண்டிரி ஸ்டெயின், லாரா குடால், கேப்டன் சுனே லூஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த லாரா வோல்வார்ட்டும் 56 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மரிஸான் கேப் - சோலே ட்ரையான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதன்பின் 62 ரன்களில் மரிஸான் கேப்பும், 70 ரன்களில் சோலே ட்ரையான் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் ஒற்றையிலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 45.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று தென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட்வாஷ் செய்தது.