விதியை மீறிய வீரர்கள்; அபராதம் விதித்த போட்டி ஏற்பாட்டாளர்கள்!

Updated: Wed, Feb 16 2022 15:10 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரை போன்றே பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெஷ்வார் சால்மி மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியை விட பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங் ஆகியோர் இடையே நடந்த மோதல் தான் பெரும் பரபரப்பை கிளப்பியது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கரீபியன் ப்ரீமியர் லீக்கில் அவர்கள் இருவரும் எதிர் எதிர் அணியில் விளையாடினர். அப்போது ஒரு போட்டியில் பென் கட்டிங்கை க்ளீன் போல்ட்டாக்கிய பவுலர் சோஹைல் தன்வீர் தனது 2 நடுவிரல்களையும் காட்டி அவமானப்படுத்தி அனுப்பினார்.

இந்த சம்பவத்திற்கு ஒழுங்கீன நடவடிக்கையாக எடுத்து போட்டி கட்டணத்தில் இருந்து 15% அபராதமாக விதிக்கப்பட்டது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடந்த பிஎஸ்எல் தொடரில் பென் கட்டிங் பதிலடி கொடுத்தார். தன்வீர் வீசிய 19ஆவது ஓவரில் பென் கட்டிங் 4 சிக்ஸர்களுடன் சேர்த்து மொத்தம் 27 ரன்களை விளாசித் தள்ளினார். இதன் பிறகு தன்வீரை பார்த்து தனது 2 நடுவிரல்களையும் காட்டி பழி தீர்த்துக் கொண்டார்.

இதனால் கோபத்தில் இருவருமே மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போட்டி நடுவர் சமாதானப்படுத்தினார். இத்துடன் இந்த பிரச்சினை தீரும் என பார்த்தால்

20ஆவது ஓவரில் நதீம் ஷா பந்துவீச பென் கட்டிங் தூக்கி அடித்தார். ஆனால் அது நேராக தன்வீரிடம் தான் சென்றது. இதனால் உற்சாகத்தில் மிதந்த அவர், மீண்டும் தனது நடுவிரலை காண்பித்து பிரச்சினையை உண்டாக்கியுள்ளார்.

அவர்கள் இருவரின் இந்த 4 ஆண்டு பிரச்சினை வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து போட்டியின் நடத்தை விதிகளை மீறியதன் காரணமாக இருவருக்கும் போட்டி கட்டணத்திலிருந்து 15 விழுக்காடு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை