ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி நியூசிலாந்தை விட சற்று சாதகமாக உள்ளது - நசீர் ஹொசைன்
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 132 ரன்களும், இங்கிலாந்து 141 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 285 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கம் சரியாக அமையவில்லை. டாப் 4 பேட்டர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்ப இங்கிலாந்து 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன்பிறகு, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.
இந்த இணை 5ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டோக்ஸ் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, பென் ஃபோக்ஸ் ஒத்துழைப்பு தர, ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதத்தைக் கடந்த ரூட் பவுண்டரி அடித்ததோடு மட்டும் இல்லாமல், ஓடியும் ரன்களை எடுத்து நெருக்கடியை நியூசிலாந்து பக்கம் திருப்பினார்.
இந்த இணை 3ஆம் நாள் ஆட்டநேர முடிவு வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. 6ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்ததில், ஃபோக்ஸ் எடுத்தது வெறும் 9 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. ரூட் 77 ரன்களுடனும், ஃபோக்ஸ் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 61 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. நியூசிலாந்து வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. இதனால், 4ஆம் நாள் ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எனினும், 4ஆம் நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கீடு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி எளிதில் வெற்றிபெறும் என முன்னாள் வீரர் நாசர் ஹொசைன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நாசர் ஹொசைன், “இப்போட்டி தற்போது ஒருதலைபட்சமாக செல்கிறது. ஏனெனில் இப்போட்டியின் முதல் இரண்டு நாள் ஆட்டமும் பந்துவீச்சுக்கு சாதமாக அமைந்திருந்தது. ஆனால் பழையப் பந்தில் விளையாடும் போது அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இது புதிய பந்து ஆடுகளமாக இருந்ததால், புதிய பந்தில் இரு அணிகளும் போராடி வருகின்றன. ஆனாலும் ஸ்டோக்ஸ் மற்றும் ரூட் ஆகியோர் பழைய பந்தில் தங்களது ஆட்டத்தைத் தொடர்ந்ததால் அவர்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது.
இதனால் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும்” என நாசர் ஹொசைன் தெரிவித்துள்ளார்.