NZ vs IND, 2nd T20I: சூர்யகுமாருக்கு புகழாரம் சூட்டிய கேன் வில்லியம்சன்!

Updated: Sun, Nov 20 2022 18:14 IST
“Best Player In The World”: Kane Williamson’s Ultimate Praise For Suryakumar Yadav (Image Source: Google)

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 191 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும், பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான பின் ஆலன் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான டீவன் கான்வே 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நீண்ட நேரம் தாக்குபிடித்து 52 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 18.5 ஓவரில் 126 ரன்கள் மட்டும் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், சூர்யகுமார் யாதவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து கேன் வில்லியம்சன் பேசுகையில், “நாங்கள் வெற்றிக்காக சரியாக போராட கூட இல்லை என்பதே உண்மை. சூர்யகுமார் யாதவின் விளையாட்டு உலகத்திற்கு அப்பாற்றபட்டதை போன்று இருந்தது. நான் பார்ததில் சூர்யகுமார் யாதவின் இந்த இன்னிங்ஸ் மிக சிறந்தது. அவர் அடிக்கும் சில ஷாட்களை நான் இதற்கு பார்ததே இல்லை, அந்த அளவிற்கு அவரது ஆட்டம் தனித்துவமிக்கதாக உள்ளது. 

நாங்கள் இந்த போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சரியாக செயல்படவில்லை. சூர்யகுமார் யாதவ் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அணியுமே இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது. சூர்யகுமார் யாதவ் சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை