புஜாராவுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுங்க - பிராட் ஹாக் ஆலோசனை!

Updated: Mon, Aug 09 2021 21:14 IST
Brad Hogg Reckons Cheteshwar Pujara’s Footwork Could Make Him A ‘Sitting Duck’ In England (Image Source: Google)

இந்திய டெஸ்ட் அணியில் தற்போது பந்துவீச்சாளர் மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் அயல் நாடுகளில் பேட்டிங் தான் தற்போது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே தொடக்க வீரர்களுக்கான இடம் அவ்வப்போது மாறிக் கொண்டே வரும் வேளையில் கோலியும் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்னும் அவரிடம் இருந்து ஒரு பெரிய ரன் குவிப்பு இதுவரை வரவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசாமல் இருந்து வருகிறார்.

அதோடு மிகப்பெரிய வேதனைக்குரிய விசயமாக புஜாராவின் பேட்டிங் ஃபார்ம் அமைந்துள்ளது. ஏனெனில் கடைசியாக அவர் விளையாடிய 5 போட்டிகளிலும் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 14 ரன்கள் மட்டுமே சராசரியாக வைத்துள்ளார். அதுமட்டுமின்றி 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் ஒரு சதம் கூட விளாச வில்லை. நடைபெற்று முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் முதல் இன்னிங்சில் 8 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 15 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

இந்நிலையில் 33 வயதான இவர் இந்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் தனது இடத்தை உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அவரது பேட்டிங் ஏமாற்றத்தையே தந்தது. இதன் காரணமாக இரண்டாவது டெஸ்டில் அவரை விளையாட வைக்கக்கூடாது என்றும், அவருக்கு பதிலாக இளம் வீரரான சூர்யகுமார் யாதவை விளையாட வைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராடு ஹாக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பிராட் ஹாக்,“இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மோசமான ஷாட்டுகளை விளையாடி ஆட்டம் இழந்து வருகிறார். முன்பு போன்று அவரிடம் தற்போது தெளிவு இல்லை. இதன் காரணமாக அந்த இடத்திற்கு மாற்று வீரரை நாம் கொண்டு வரவேண்டியது அவசியம். அந்த வகையில் இலங்கை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ள சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் விளையாட சரியாக இருப்பார்.

ஏனெனில் தற்போது தொடக்க வீரராக ராகுல் சிறப்பாக விளையாடி வருவதால் மூன்றாவதாக சூர்யகுமார் யாதவ் விளையாடும் பட்சத்தில் அது நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். ஏனெனில் உள்நாடு மற்றும் வெளிநாடு என்று எந்த மைதானங்களிலும் சூர்யகுமாரால் ரன்களை குவிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை