சிபிஎல் 2023: லூசியா கிங்ஸை வீழ்த்தி ஜமைக்கா தலாவாஸ் அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் 11 சீசன்களை கடந்த தற்போது 12ஆவது சீசன் கோலாகலமாக இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜமைக்கா அணிக்கு கேப்டன் பிராண்டன் கிங் - கிர்க் மெக்கன்ஸி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மெக்கன்ஸி 20 ரன்களுக்கும், ஷமாரா ப்ரூக்ஸ் 12 ரன்களுக்கும், அமிர் ஜங்கு ரன்கள் ஏதுமின்றியும், ரெர்ஃபெர் 16 ரன்களுக்கும், ஃபாபியன் ஆலன் 15 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான பிராண்டன் கிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். பின் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 81 ரன்களை விளாசிய பிரண்டன் கிங் தனது விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் ஜமைக்கா தலாவாஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லூசியா கிங்ஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய லூசிய கிங்ஸ் அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜான்சன் சார்லாஸ் தொடக்கம் கொடுத்தனர். இதில் டூ பிளெசிஸ் 9 ரன்களிலும், சார்லஸ் 24 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சீன் வில்லியம்சும் 26 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா, கிமனி மெலியஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் இணைந்த ரோஸ்டன் சேஸ் - ரோஷன் பிரைமஸ் இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பிரைமஸ் 37 ரன்களில் ரன் அவுட்டாக, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ரோஸ்டன் சேஸும் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 53 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாததால், செயிண்ட் லூசியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜமைக்கா அணி தரப்பில் இமாத் வாசிம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் ஜமைக்கா தலாவாஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.