விண்டீஸின் வரலாற்று வெற்றியை கண்டு கண்கலங்கிய பிரையன் லாரா - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 289 ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸை முடித்தது.
இதன்மூலம் 22 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களை மட்டுமே எடுத்து இன்னிங்ஸை முடித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 216 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாட, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதில் கேமரூன் க்ரீன் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன்களைச் சேர்த்தார். அவரைத்தவிர்த்து ஸ்டீவ் ஸ்மித் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஷமார் ஜோசப்பின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகள இழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசி அணியை வெற்றிபெற செய்த ஷமார் ஜோசப் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர்நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றதை வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கண்கலங்கி தனது உணர்சியை வெளிப்படுத்தினார். அவரை அருகிலிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்டும் கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கண்கலங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.