உங்களுக்கு நான் என்னயா பாவம் பண்ணேன்? - காயமடைந்த புகைப்படத்தை பகிர்ந்த பூரன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான கடைசி டி20 ஆட்டம் ஃபுளோரிடாவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து வெற்றியை ருசித்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பின் ஒரு தொடரில் வீழ்த்தி சாதனை படைத்தது. இதனால் உலகக்கோப்பைத் தொடருக்கு கூட தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ளது.
இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தயாராகி வருவதாகவும் பார்க்கப்பட்டது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 35 பந்துகளில் 47 ரன்கள் விளாசி பூரன் அசத்தினார். அதேபோல் 5 போட்டிகளில் மொத்தமாக 176 ரன்கள் விளாசி தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இந்தப் போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் வீசிய பந்து ஒன்று நிக்கோலஸ் பூரனின் வயிற்றுப் பகுதியில் பட்டுச் சென்றது. இதனால் நிக்கோலஸ் பூரன் மருத்துவ சிகிச்சையும் உடனடியாக எடுத்துக் கொண்டார். அதேபோல் பிரண்டன் கிங் அடித்த பந்து நிக்கோலஸ் பூரன் கைகளில் அடித்து சென்றது. இந்த அடிகளை புகைப்படம் எடுத்து ட்விட்டர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து நிக்கோலஸ் பூரன், போட்டியின் பின் விளைவுகள். அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரண்டன் கிங் ஆகியோருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். நிக்கோலஸ் பூரனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.