அஸ்வினை ஓரங்கட்டிய 16 வயது வீராங்கனை!
கிரிக்கெட்டில் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. விதிமுறைகளின்படி அதைச் செய்ய பந்துவீச்சாளருக்கு உரிமை உண்டு என்றாலும் கிரிக்கெட் உலகில் இதற்கான ஆதரவு குறைவாகவே உள்ளது.
சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய அணிகள் தயங்குவதுண்டு. 2019 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஒரே ஆட்டத்தில் நான்கு பேரை மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார் கேம்ரூன் வீராங்கனை மேவ் டெளமா. போட்ஸ்வானாவில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான ஆப்பிரிக்கா தகுதிச்சுற்றுப் போட்டியில் உகாண்டா - கேம்ரூன் மகளிர் அணிகள் விளையாடின.
முதலில் பேட்டிங் செய்த உகாண்டா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில் உகாண்டா வீராங்கனைகள் நான்கு பேரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் 16 வயது கேம்ரூன் பந்துவீச்சாளர் மேவ் டெளமா.
முதல்முறை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தபோதே அது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. எனினும் பிறகு பேட்டிங் செய்த உகாண்டா வீராங்கனைகளும் கவனக்குறைவில் டெளமா பந்துவீச வரும்போது கிரீஸை விட்டு வெளியே வந்ததால் அடுத்தடுத்து மூன்று பேரை அதே மான்கட் முறையில் ரன் அவுட் செய்தார் டெளமா.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
எனினும் அவருடைய இந்த முயற்சியால் கேம்ரூன் அணிக்குப் பெரிய நன்மை கிடைக்கவில்லை. ஏனெனில் அதன்பின் இலக்கை துரத்திய கேம்ரூன் அணி 14.3 ஓவர்களில் 35 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை எதிர்கொண்டது.