இந்த சீசனின் மிகச்சிறந்த கேப்டன் இவர் தான் - வீரேந்திர சேவாக்!
ஐ.பி.எல். லீக் சுற்றின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதில் இன்று நடக்கும் முதல் ‘தகுதிச் சுற்று’ (Qualifier 1) ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணி 2வது குவாலிஃபயர் சுற்றில் விளையாட வேண்டும்.
அறிமுக சீசனிலேயே புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றில் அசத்தலாக களமிறங்குகிறது குஜராத். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுபவர் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ''இந்த சீசனில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கேப்டன் யார் என்றால் அது ஹர்திக் பாண்டியாதான். அவர் இவ்வளவு பிரம்மாதமான கேப்டன்சியை செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அவர் பேட்டிங் செய்யும் விதத்திலும் சரி, கேப்டன்சியிலும் சரி ஆக்ரோஷமாக இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் அப்படியில்லை. மிகவும் கூலாகவும், அமைதியாகவும் இருக்கிறார்.
குஜராத் அணி பல போட்டிகளில் வெற்றி பெற்றதற்காகவோ அல்லது அந்த அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா எனது நண்பர் என்பதற்காகவோ இதைச் சொல்லவில்லை. ஒருவரின் கேப்டன் பதவியை நீங்கள் எப்போது ரசிப்பீர்கள்? முக்கியமான தருணங்களில் கவனமாக முடிவு எடுப்பது.
அதை , ஹர்திக் சிறப்பாக கையாள்கிறார். நெருக்கடியான சூழ்நிலைகளில் அவர் அமைதி காத்தார். அதனால்தான் அவரது கேப்டன்ஷிப்பை நான் விரும்புகிறேன்'' எனப் புகழ்ந்துள்ளார்.