அர்ஷ்தீப் சிங் குறித்து விக்கிப்பீடியாவில் சர்ச்சை; இந்திய அரசு நடவடிக்கை!
ஆசிய கோப்பை தொடரில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 181/7 ரன்களை எடுத்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தோல்விக்கு இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தான் காரணம் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. போட்டியின் கடைசி தருணத்தில் பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஆசிப் அலியின் கேட்ச்-ஐ அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இறுதியில் ஆசிப் அலி 8 பந்துகளில் 16 ரன்களை விளாசி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அர்ஷ்தீப்பை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கெல்லாம் ஒருபடி மேல் சென்ற பாகிஸ்தான் ரசிகர்கள், அர்ஷ்தீப் சிங் ஒரு காலிஸ்தானி என்று கூறி சமூகவலைதளங்களில் பரப்பினர். இதனை பார்த்த இந்திய ரசிகர்களும் அவரை காலிஸ்தானி எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் விக்கிப்பீடியாவில் அர்ஷ்தீப் சிங்கின் நாடு இந்தியா என்பதை அழித்துவிட்டு காலிஸ்தான் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய வீரர் மீது மத வெறி தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது அர்ஷ்தீப்பின் விக்கிப்பீடியா பக்கத்தில் எப்படி சர்ச்சைக்குரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து நேரில் வந்து பதிலளிக்க இந்தியாவில் உள்ள விக்கிப்பீடியா அதிகாரிகளுக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு முன்னணி கிரிக்கெட் வீரரின் விக்கிப்பீடியாவை கூட எப்படி இவ்வளவு சுலபமாக எடிட் செய்ய முடிகிறது, அதற்கு எப்படி அனுமதி கொடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் மூலம் இனி விக்கிப்பீடியாவில் திருத்தம் மேற்கொள்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது.