ஐபிஎல் 2022: ஊதா தொப்பியை அவர்தான் வாங்கணும் - குல்தீப் யாதவ்!

Updated: Fri, Apr 29 2022 15:59 IST
Image Source: Google

மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் நேற்று நடைபெற்ற 41ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின. 

இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்த வெற்றியால் பங்கேற்ற 8 போட்டிகளில் 4ஆவது வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறி நிம்மதி அடைந்தது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் பந்து வீச்சில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்து போராடிய போதிலும் இதர பவுலர்கள் கைகொடுக்க தவறியதால் 9 போட்டிகளில் 6ஆவது தோல்வியை பதிவு செய்த கொல்கத்தா 8ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த வெற்றிக்கு வெறும் முத்தாக 3 ஓவர்கள் வீசினாலும் 14 ரன்கள் மட்டும் கொடுத்து ஆண்ட்ரே ரஸ்ஸல் உட்பட 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த வருடம் டெல்லி இதுவரை பதிவு செய்துள்ள 4 வெற்றிகளிலும் அவர் மட்டுமே ஆட்டநாயகன் விருதை வென்று ரிஷப் பந்த் போன்ற முக்கிய வீரர்களை காட்டிலும் டெல்லியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

இத்துடன் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்களை அள்ளியுள்ள அவர் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களின் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து ஊதா நிற தொப்பிக்கு போட்டி போட்டு வருகிறார். ஆனால் போட்டிக்கு முதல் இடத்தில் யார் இருக்கிறார் என்று பார்த்தால் அவரின் நண்பரான ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் மற்றொரு இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 18 (8) விக்கெட்டுகளுடன் உள்ளார். 

இப்படி இந்தியாவின் முக்கிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது சிறப்பான செயல்பாடுகளால் ஊதா தொப்பிக்கு போட்டி போடுவது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஏனெனில் 207 – 2019 ஆகிய காலகட்டங்களில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சில் ஜோடியாக உருவெடுத்த இவர்கள் இதேபோல அபாரமாக பந்துவீசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வந்தார்கள். அதன் காரணமாக “குல்ச்சா” என ரசிகர்களால் அழைக்கப்பட்ட இந்த ஜோடியின் பந்துவீச்சில் சரிவு ஏற்பட்டதால் 2019 உலக கோப்பைக்கு பின் ஒன்றாக சேர்ந்து விளையாடும் வாய்ப்பை இழந்தது. 

அத்துடன் 2021 டி20 உலக கோப்பையில் இந்த இருவரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு கிடைக்காத அளவுக்கு இந்திய அணியிலிருந்து தூரம் சென்ற இவர்கள் தற்போது மீண்டும் அதே பழைய ஃபார்முக்கு திரும்பி சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளனர்.

அதிலும் இந்த வருடம் இந்த இருவரும் தங்களது அணிக்கான போட்டியில் சிறப்பாக செயல்படும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் பாராட்டி பாசமழை பொழிந்து வருகின்றனர். அதைவிட முதலிடத்தில் உள்ள சஹாலை முந்தி ஊதா தொப்பியை வாங்க முயற்சிப்பீர்களா என்று நேற்றைய போட்டி முடிந்த பின் ஹர்ஷா போக்லே எழுப்பிய கேள்விக்கு குல்தீப் யாதவ் பதிலளிக்கையில்,

“சஹாலுடன் எப்போதும் எனக்கு போட்டி இல்லை. நான் காயமடைந்த கடினமான தருணங்களில் அவர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார். எனவே ஊதா தொப்பியை அவர் வெல்வார் என்று நம்புகிறேன்” என்று கூறினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை