இணையத்தி வைரலாகும் ‘தல’ தோனியின் காணொளி!
ஐபிஎல் தொடங்கிய 2008ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியில் அங்கம் வகிப்பதுடன், அந்த அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியும் வருகிறார் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இதுவரை 14 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி சூதாட்டப்புகாரில் தடையில் இருந்த 2 சீசன்களை (2016 மற்றும் 2017) தவிர, சிஎஸ்கே அணி ஆடிய அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணியை வெற்றிகரமாக வழிநடத்திவருகிறார் தோனி.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக வெற்றிநடை போட்டுவருகிறது. இதுவரை ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி ஆடியுள்ள 12 சீசன்களில் ஒரேயொரு சீசனில் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனை தவிர மற்ற அனைத்து சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.
சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக திகழ தோனிதான் முக்கியமான காரணம். 15ஆவது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் ப்ரமோஷன் வீடியோவுக்காக தோனி அடித்த முதல் விசில் காணொளியை மீள்பதிவிட்டு, #14YearsOfThala என்ற பெயரில் சிஎஸ்கே அணி தோனியின் 14 ஆண்டு கால பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ளது.
அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தோனி விரைவில் ஐபிஎல்லில் இருந்தும் விலகிவிடுவார். தனது கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் என தோனி வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 15ஆவது சீசன் அல்லது அடுத்த ஆண்டு நடக்கும் 16ஆவது சீசன் தான் கடைசி சீசனாக இருக்கும்.