சட்டேஷ்வர் புஜராவின் மற்றொரு மேஜிக் - ஹைலைட்ஸ் காணொளி!
இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்றழைக்கப்பட்ட சட்டேஷ்வர் புஜாரா கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் சிறப்பாக சோபிக்கவில்லை. இதனால், இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். 2012ஆம் ஆண்டிற்கு பிறகு உள்நாட்டில் நடக்கும் டெஸ்டில் புஜாரா கலந்துகொள்ளாதது இதுதான் முதல்முறை.
இதனால், புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய ஃபார்மை மீட்டெடுக்க புஜாரா தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். சசெக்ஸ் அணிக்காக முதலில் கவுண்டி டெஸ்ட் தொடரில் பங்கேற்ற அவர் வெறும் 13 இன்னிங்ஸ்களில் 3 இரட்டைகளுடன், 5 சதங்கள் உட்பட 1094 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார். அதிகபட்ச ஸ்கோர் 231 ஆகும்.
அப்படி புஜாரா அதிரடி காட்டியதால், கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. புஜாராவின் அதிரடி அத்தோடு முடிந்துவிடவில்லை. தற்போது ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை தொடரில் சசெக்ஸ் அணியை வழிநடத்திவரும் இவர், இத்தொடரிலும் காட்டடி அடித்து வருகிறார். சமீபத்தில் வார்விக்ஷிர் அணிக்கு எதிராக 79 பந்துகளில் 107 ரன்களை குவித்து மிரள வைத்தார். குறிப்பாக, அப்போட்டியில் ஒரே ஓவரில் 22 ரன்களை சேர்த்தும் அசத்தினார்.
இதனால், இத்தொடரில் புஜாரா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சர்ரே அணிக்கு எதிராக வெறும் 131 பந்துகளில் 174 ரன்களை குவித்து மீண்டும் பிரமிக்க வைத்துள்ளார். முதலில் 103 பந்துகளில் 100 ரன்களை கடந்த அவர் அடுத்த 28 பந்துகளில் 74 ரன்களை சேர்த்தார். இதில் 20 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புஜாராவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் சசெக்ஸ் அணி 50 ஓவர்கள் 6 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சர்ரே அணி 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சசெக்ஸ் அணி 216 ரன்கள் வித்தியாசத்தில் சர்ரே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுள்ளது குறிப்பிடத்தக்கது.