ரஞ்சி கோப்பை 2022: டக் அவுட்டான புஜாரா!
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் பல ஆட்டங்களாக மோசமாக விளையாடி வருகிறார்கள். 2018 டிசம்பரிலும் 2019 ஜனவரியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்டுகளில் சதங்கள் அடித்தார் புஜாரா. ரஹானே இதைவிடவும் மோசம். 2020 டிசம்பரில் கோலி இல்லாத இந்திய அணியை வழிநடத்தி மெல்போர்னில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். சதமடித்த மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார்.
புஜாரா, ரஹானே ஆகிய இருவருக்கும் 33 வயதுதான். அதனால் இருவரும் ரஞ்சி போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று திறமையை மீட்டுக்கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
ரஞ்சி கோப்பைப் போட்டி பிப்ரவரி 17 முதல் தொடங்கியுள்ளது. ஆமதாபாத்தில் மும்பை - செளராஷ்டிரம் ஆகிய அணிகள் மோதுகின்றன. பிருத்வி ஷா தலைமையிலான மும்பை அணியில் ரஹானேவும் உனாட்கட் தலைமையிலான அணியில் புஜாராவும் இடம்பெற்றுள்ளார்கள்.
டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த மும்பை அணி சிறப்பாக விளையாடியுள்ளது. ரஹானே 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 24 வயது சர்ஃபராஸ் கான் அபாரமாக விளையாடி 275 ரன்கள் எடுத்தார். மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 157 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இன்று செளராஷ்டிர அணி பேட்டிங் செய்து வருகிறது. நான்காவது வீரராகக் களமிறங்கிய புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் மோஹித் அவஸ்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
உணவு இடைவேளையின்போது செளராஷ்டிர அணி, 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.