ராயல் லண்டன் ஒருநாள் : மீண்டும் மிரட்டிய புஜாரா; ஆச்சரியப்படும் ரசிகர்கள்!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் லண்டன் ரயல் ஒரு நாள் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாடும் புஜாரா 131 பந்துகளில் 174 ரன்கள் குவித்து கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இன்றையப் போட்டியில் சசக்ஸ் அணி சர்ரே அணியை எதிர்த்து விளையாடுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, சசெக்ஸ் அணி தனது முதல் பேட்டிங்கை தொடங்கியது.
சசெக்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களம் கண்ட சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து, சசக்ஸ் அணியின் கேப்டன் புஜாரா மற்றும் டாம் கிளார்க் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அபாரமாக விளையாடி ரன்களைக் குவித்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
சசெக்ஸ் அணியின் கேப்டனான புஜாராவின் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களின் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது. அதிரடி ஆட்டத்தினை பெரிதும் வெளிப்படுத்தாமல் ரன்களை சேர்க்கும் பாணியில் விளையாடும் புஜாரா இன்று ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். அவரது இந்த அதிரடியான ஆட்டமே கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 131 பந்துகளில் 174 ரன்கள் குவித்தார். அதில் 20 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவர் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பினை 26 ரன்களில் நழுவ விட்டார். இதன்மூலம் சசெக்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்களைச் சேர்த்தது.
இந்த லண்டன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 367 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தற்போது 34 வயதான புஜாரா இந்தப் போட்டிகளில் மட்டுமல்லாமல் கவுண்டி போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் புஜாரா இடம் பெறவில்லை. அதன்பின் 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,094 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 109.40 ஆகும்.
தற்போது, லண்டன் ராயல் ஒரு நாள் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இன்றைய போட்டியில் ருத்ரதாண்டம் ஆடிய புஜாரா இதற்கு முந்தைய போட்டியிலும் சதம் அடித்திருந்தார். அந்தப் போட்டியில் ஒரே ஓவரில் அவர் 22 ரன்கள் விளாசியதும் குறிப்பிடத்தக்கது.