PAK vs NZ 4th T20I: பாகிஸ்தான வீழ்த்தி நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி!

Updated: Fri, Apr 26 2024 12:05 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் பொட்டி மழை காரணமாக தடைபட்டும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்படுத்தின. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் - டாம் பிளெண்டல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் டாம் பிளெண்டல் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்த டிம் ராபின்சன் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஃபாக்ஸ்கிராஃப் 34 ரன்களையும், மார்க் சாப்மேன் 8 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெல் 27 ரன்களையும் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜிம்மி நீஷம் 11 ரன்களைச் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆசாம் 5 ரன்களுக்கும், சைம் அயூப் 20 ரன்களுக்கும், உஸ்மான் கான் 16 ரன்களுக்கும், ஷதாப் கான் 7 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் இணைந்த ஃபகர் ஸமான் - இஃப்திகார் அஹ்மத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

இதில் அதிரடியாக விளையாடி வந்த ஃபகர் ஸமான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் இஃப்திகார் அஹ்மத் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 61 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை