இனியும் பரபரப்பான ஆட்டம் வேண்டாம் - மரிசேன் கேப்!
ஹேமில்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 47.5 ஓவர்களில் 228 ரன்களை எடுத்தது. கேப்டன் சோபி டிவைன் 101 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். அமேலியா கெர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 8 ஓவர்களில் 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்ததால் 250 ரன்களை எடுக்க முடியாமல் போனது.
இலக்கை ஆரம்பத்தில் நன்கு விரட்டிய தென் ஆப்பிரிக்க அணி கடைசிக்கட்டத்தில் தடுமாறியது. இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது. இறுதியில் 49.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. மரிஸேன் கேப் 35 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது தென் ஆப்பிரிக்க அணி. மகளிர் உலகக் கோப்பையில் முதல்முறையாக நியூசிலாந்தைத் தோற்கடித்து புள்ளிகள் பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது. 5 ஆட்டங்களில் இரு வெற்றிகளை மட்டும் பெற்ற நியூசிலாந்து அணி, 4ஆம் இடத்தில் உள்ளது.
சிறந்த வீராங்கனைக்கான விருதைத் தொடர்ந்து இருமுறை வாங்கியுள்ள மரிசேன் கேப், ஆட்டம் முடிந்தபிறகு பேசுகையில், “இதுபோன்று நூலிழையில் வெற்றி பெறும் பரபரப்பான ஆட்டங்கள் இனிமேலும் வேண்டாம். நான் சோர்வாகி விட்டேன். அணியினர் அனைவரும் பங்களித்ததால் கிடைத்த வெற்றி இது. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. விரைவில் அதைச் செய்து காட்டுவோம். இங்கிலாந்துக்கு எதிராக நன்றாகப் பந்துவீசினோம். இன்று எப்படியோ தப்பித்து விட்டோம்.
எங்களுடைய பேட்டர்கள் தடுமாறுகிறார்கள். நாங்கள் நன்கு விளையாட வேண்டும். நிச்சயம் அதைச் செய்வோம் என்கிற நம்பிக்கை உண்டு. இன்றைய ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் நான் பதற்றத்துடன் இருந்தேன். நான் பொய் சொல்லவில்லை. ஆட்டத்தில் எப்போதும் ஓய்வெடுக்க முயலக் கூடாது. இதுபோன்ற ஆட்டங்களில் உடனே எல்லாமும் மாறிவிடும். எனினும் நாங்கள் இன்று வெற்றி பெற்று விட்டோம். இன்னும் சிலர் நன்றாக விளையாடினால் நாங்கள் நிறைய வெற்றிகளை அடைவோம்” என்று தெரிவித்துள்ளார்.