‘சாதாரணமான வாழ்க்கையை மறந்துவிடுங்கள்' - அஸ்வின் எச்சரிக்கை !
கரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து வெளிநாட்டு வீரர்கள், உள்ளூர் வீரர்கள் என அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா பாதிப்பால் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொலியில் பேசியுள்ள அஸ்வின், “சாதாரணமான வாழ்க்கையை இனி மறந்து விடுங்கள். ஏனெனில் தற்போது உள்ள சூழலில் நமது இயல்பான வாழ்க்கையை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. அதேசமயம் மாஸ்க் இல்லாமல் வாழ்வதை மறந்து விடுங்கள். அப்போது தான் நமது சந்ததியினருக்கு நம்மால் இவ்வுலகை கொடுக்க முடியும். அதனால் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக என்.95 ரக முகக் கவசம் வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு தனது சொந்த செலவில் முகக்கவசங்களை வழங்கவுள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.