கரோனா நிவாரணம் : ஆக்ஸிஜன் செறியூட்டிகளை வாரி வழங்கும் பிசிசிஐ - ரசிகர்கள் பாராட்டு!
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை கோரத்தாண்டவமாடி வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இன்றியும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் உதவி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டாயிரம் ஆக்ஸிஜன் செறியூட்டிகளை வழங்கியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு உதவும் வகையில் பிசிசிஐ 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2000 ஆக்ஸிஜன் செறியூட்டிகளை வழங்க உள்ளது என தெரிவித்துள்ளது.
பிசிசிஐயின் இந்த முயற்சிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.