சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி மார்க் டியாலின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தது. இதில் மார்க் டியால் 78 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் லிண்டல் சிம்மன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதைத்தொடர்ந்து அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்த சுனில் நரைன், காலின் முன்ரோ இணை சீரான வேகத்தை ரன் ரேட்டை உயர்த்தியது. பின் நரைன் 30 ரன்களிலும் முன்ரோ 28 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட் 28, டேரன் பிராவோ 25 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால்18.3 ஓவர்களிலேயே நைட் ரைடர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்களை மட்டுமே எடுத்தது. கிங்ஸ் அணி தரப்பில் டேவிட் வைஸ் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான டிரின்பாகோ நைட் ரைடர்ஸை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.