சிபிஎல் 2022: வைஸ் அபார பந்துவீச்சு; செயிண்ட் லூசியா கிங்ஸ் வெற்றி!

Updated: Sun, Sep 18 2022 08:10 IST
CPL 2022: All-round Wiese stars in St Lucia Kings' clinical win (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசிய கிங்ஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டூ பிளெசிஸ் 41 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த சார்லஸ் அரைசதம் கடந்ததுடன் 61 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் ரஷித் கான், பிரிட்டோரியஸ், டுவைன் பிராவோ தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை விரட்டிய பேட்ரியாட்ஸ் அணியில் ஆண்ட்ரே பிளெட்சர், எவின் லூயிஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் அதிரடி காட்டிய டெவால்ட் பிரேவீஸ் 19 பந்துகளில் 39 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். செயிண்ட் லூசியா கிங்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீச்சில் டேவிட் வைஸ் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 8 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை