சிபிஎல் 2022: ஒரு ரன்னில் செயிண்ட் லூசியா கிங்ஸ் த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசிய கிங்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் ஜான்சன் சார்லஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
இறுதியில் டேவிட் வைஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பந்துகளில் 33 ரன்களைச் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் ஜூலியன், காலின் முன்ரோ, நிக்கோலஸ் பூரன் ஆகியோருர் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டிம் செய்ஃபெர்ட் - கிரென் பொல்லார்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் செய்ஃபெர்ட் 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, 34 ரன்களில் கிரேன் பொல்லார்டும் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.