சிபிஎல் 2022: பிராண்டன் கிங் சதம் வீண்; கயானா வாரியர்ஸ் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கயானா அணியில் குர்பாஸ் ரன் ஏதுமின்றியும், சந்தர்பால் ஹெம்ராஜ் 13 ரன்களோடும் விக்கெட்டை இழந்தர். பின்னர் களமிறங்கிய ஷாய் ஹோப் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு அரைசதம் கடந்தும் அசத்தினார்.
பின் 45 பந்துகளில் 60 ரன்களைச் சேர்த்திருந்த ஹோப், முகமது நபி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இறுதியில் ஓடியன் ஸ்மித் 14 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி 42 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கயானா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்தது. ஜமைக்கா அணி தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜமைக்கா அணியில் கென்னர் லூயிஸ், கிர்க் மெக்கன்ஸி, ரோவ்மன் பாவல், ரெய்மான் ரெய்ஃபெர் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு பெவிலியனுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர்.
ஆனாலும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மற்றொரு தொடக்க வீரர் பிராண்டன் கிங் சதம் விளாசி அணியின் நம்பிக்கையை அதிகரித்திருந்தார். ஆனால் 66 பந்துகளில் 7 சிக்சர், 8 பவுண்டரிகள் என 104 எடுத்திருந்த நிலையில் பிராண்ட் கிங்கும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் 19.5 ஓவர்களில் ஜமைக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.