சிபிஎல் 2022: வெப்ஸ்டர் அதிரடி; நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றும் வரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் இதுவரை வெற்றிகரமாக 9 சீசன்களைக் கடந்து 10ஆவது சீசனை தொடங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற நைட்ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணியில் ஜான்சன் சார்லஸ் 3 ரன்களிலும், லெரி லக் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் களமிறங்கிய மார்க் டியால் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. நைட் ரடர்ஸ் அணி தரப்பில் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நைரன் 6 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த வெப்ஸ்டர் - டிம் செய்ஃபர்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் டாம் வெப்ஸ்டர் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் வெப்ஸ்டர் 58 ரன்களிலும், டிம் செய்ஃபெர்ட் 34 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இறுதியில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்த போதிலும், 19.2 ஓவரில் இலக்கை எட்டியது.
இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.