சிபிஎல் 2023: பார்போடாஸை வீழ்த்தி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் 11 சீசன்களை கடந்த தற்போது 12ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற தொடரின் இரடாவது போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜான்சன் சார்லஸ் 30 ரன்களுக்கும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 46 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அதன்பின் களமிறங்கிய சாட்ராக் டெகார்ட்டும் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த சீன் வில்லியம்ஸ் அதிரடியாக விளையாடினார். அதேசமயம் மறுபக்கம் சிக்கந்தர் ரஸா 23 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் 14 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 47 ரன்களை எடுத்திருந்த சீன் வில்லியம்ஸும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைக் குவித்தது. பார்போடாஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், கைஸ் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பார்போடாஸ் அணிக்கு ரக்கீம் கார்ன்வால் - கைல் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரக்கீம் கார்ன்வால் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜஸ்டின் க்ரீவிஸும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவர்களைத் தொடர்ந்து கைல் மேயர்ஸ் 16 ரன்களிலும், கெவின் விக்ஹாம் 10 ரன்களுக்கும், கேப்டன் ரோவமன் பாவெல் ரன்கள் ஏதுமின்றியும், ஜேசன் ஹோல்டர் 10 ரன்களுக்கும், டொனவன் ஃபெரீரா 19 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய நயீம் யங் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினாலும், 48 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் 20 ஓவர்களில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லூசியா கிங்ஸ் தரப்பில் மேத்யூ ஃபோர்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு உதவியாக இருந்த மேத்யூ ஃபோர்ட் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.