சிபிஎல் 2023: பார்போடாஸை வீழ்த்தி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் செயிண்ட் லூசிய கிங்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லூசிய கிங்ஸ் அணிக்கு காலின் முன்ரோ - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான்சன் அரைசதம் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட காலின் முன்ரோ 33 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் 5 ரன்களுக்கும், டெஸ்கார்ட் 8 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஜான் சார்லஸ் 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 78 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பிரிமஸ் 19, சிக்கந்தர் ரஸா 18 என விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லூசிய கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கைல் மேயர்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், ரஹ்கீம் கார்ன்வால் 18 ரன்களுக்கும், அலிக் அதானாஸ் 4 ரன்களுக்கும், லௌரி எவான்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், ரோவ்மன் பாவெல் 5 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேசன் - நயீம் யங் ஓரளவு தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தனர். பின் ஹோல்டர் 18 ரன்களுக்கும், நயீம் யங் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் பெரிதளவில் சோபிக்க முடியவில்லை. இதனால் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லூசியா கிங்ஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ரோஷன் பிரிமஸ், பீட்டர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.