சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் காரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அமேசன் வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணிக்கு கேப்டன் பிராண்டன் கிங் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய அலெக்ஸ் ஹேன்ஸ் 9 ரன்களுக்கும், கிர்க் மெக்கன்ஸி 13 ரன்களுக்கும், இமாத் வாசிம் 18 ரன்களுக்கும், ஷமாரா ப்ரூக்ஸ் 10 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதனைத்தொடர்ந்து மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த கேப்டன் பிராண்டன் கிங் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் 52 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இறுதியில் ரெய்ஃபெர் 20 ரன்களையும், ஃபஃபியன் ஆலன் 21 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஜமைக்கா தலாவாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கயானா அணிக்கு சைம் அயுப் - மேத்யூ நந்து இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் மேத்யூ நந்து 37 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 85 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயுப் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த சாய் ஹோப் 16 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.