சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை அடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரக்கீம் கார்ன்வால் மற்றும் குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரஹ்கீம் கார்ன்வால் மற்றும் டி காக் இருவரும் தலா 2 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய கதீம் 4 ரன்களுக்கும், அலிக் அதானாஸ் 10 ரன்களுக்கும் கேப்டன் ரோவ்மன் பாவெல் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த ஜேசன் ஹோல்டர் மற்றும் டேவிட் மில்லர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் ஹோல்டர் 21 ரன்களிலும், மில்லர் 21 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் பார்படாஸ் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்ததுடன் 96 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. செயின்ட் லூசியா கிங்ஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய லூசியா கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அக்கீம் அகஸ்டேவும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸுடன் இணைந்த ரோஸ்டன் சேஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 26 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த ரோஸ்டன் சேஸ் 39 ரன்களையும், டிம் செய்ஃபெர்ட் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 13.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.