என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்தை எனது தந்தைக்காக நான் அர்ப்பணிக்கிறேன் - ஆவேஷ் கான்!

Updated: Sat, Jun 18 2022 13:16 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 169 ரன்களை குவித்தது. பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதன் காரணமாக 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி இந்த தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் 4 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்தூரைச் சேர்ந்த 25 வயதே ஆன அவேஷ் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் கடந்த இரண்டு சீசன்களாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். 

இதன் காரணமாக இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் நேற்றைய போட்டிக்கு முன்னதாக 5 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திருந்தார். அதிலும் இந்த தென் ஆப்பிரிக்க தொடர் ஆரம்பித்ததிலிருந்து ஹர்ஷல் பட்டேல் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வந்த வேளையில் முதல் மூன்று போட்டிகளிலுமே ஆவேஷ் கான் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.

விக்கெட்டுகளை கைப்பற்ற தவித்த அவர் அதிக அளவு ரன்களையும் விட்டுக்கொடுத்தால் நான்காவது போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றத்தை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என்றும் அவரை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுத்து வந்தன. 

ஆனால் நேற்றைய போட்டியிலும் அதே பிளேயிங் லெவனுடன் இந்திய அணி அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பு அளித்து விளையாட வைத்தது. அந்த வகையில் நேற்றைய போட்டியில் தனது வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட ஆவேஷ் கான் தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தனது இந்த அற்புதமான பந்து வீச்சு குறித்து பேசியிருந்த ஆவேஷ் கான், “இந்த போட்டியில் நான் பந்து வீசிய விதம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். முதல் சில போட்டிகளில் என்னால் விக்கெட் வீழ்த்த முடியாத வேளையில் இந்த போட்டியில் மீண்டும் எனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை எடுத்ததில் மகிழ்ச்சி.

என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்தை எனது தந்தைக்காக நான் அர்ப்பணிக்கிறேன். இன்று அவரது பிறந்த நாள் அவரது பிறந்த நாள் பரிசாக இந்த ஆட்டத்தை அவருக்கு சமர்பிக்கிறேன். இந்த போட்டியில் நான் ஸ்டம்ப் லைனில் அட்டாக் செய்து பந்து வீச வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதோடு பந்து நன்றாக பவுன்ஸ் ஆகியும் வந்தது, லோவாகவும் சென்றது. எனவே நான் குட் லென்த் ஏரியாவில் பவுன்சர்களை வீசினேன்.

ரிஷப் பண்டும் என்னிடம் வந்து இந்த மைதானத்திற்கு ஏற்ப ஸ்லோ லெக் கட்டர்களை வீசு என்று கூறினார். அவர் கூறியது போலவும் தொடர்ந்து பந்துவீசியதனால் இந்த போட்டியில் எனக்கு விக்கெட்டுகளும் கிடைத்தது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஒவ்வொன்றையும் மிகவும் ரசித்து விளையாடி வருகிறேன். இனிவரும் போட்டிகளிலும் என்னுடைய 100 சதவீத பங்களிப்பை நான் இந்திய அணிக்காக வழங்க கடுமையாக முயற்சிப்பேன்” என அவர் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை