உலகின் மிகச்சிறந்த வீரர்களின் ஒருவர் நீங்கள் - ஹர்பஜனை புகழ்ந்த ஸ்ரீசாந்த்!

Updated: Fri, Dec 24 2021 21:31 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் 1998ஆம் ஆண்டு அறிமுகமானார் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுடன் இணைந்து இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். கங்குலி மற்றும் தோனி தலைமையிலான இந்திய அணிகளில் முக்கிய அங்கம் வகித்தார்.

1998ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டுவரை சர்வதேச கிரிக்கெட்டில்  விளையாடிய ஹர்பஜன் சிங், 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அண்மையில் தான் இவரது விக்கெட் சாதனையை முறியடித்தார் அஷ்வின். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தற்போது 41 வயதாகிவிட்ட ஹர்பஜன் சிங்கிற்கு இனிமேல் ஐபிஎல்லிலும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அவர், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.  

ஹர்பஜன் சிங்கிற்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், ஹர்பஜன் சிங்கிற்கு முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த்தும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

ஹர்பஜன் சிங் குறித்து ஸ்ரீசாந்த் பதிவிட்ட ட்வீட்டில், “நீங்கள்(ஹர்பஜன்) இந்தியாவின் சிறந்த வீரர்களில் ஒருவர் மட்டுமல்ல; சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவர். உங்களுடன் பழகவும், இணைந்து ஆடவும் வாய்ப்பு கிடைத்தது பெரிய கௌரவம். உங்களுடைய அன்பான அரவணைப்புகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

 

முன்னதாக கடந்த 2008 ஐபிஎல்லில் பஞ்சாப் அணியில் ஸ்ரீசாந்தும், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜனும் ஆடினர். அந்த போட்டியில் மும்பை அணி தோல்வியடைய, போட்டிக்கு பின்னர் ஹர்பஜனிடம் ஏதோ நக்கலாக ஸ்ரீசாந்த் கூற, அதனால் செம கடுப்படைந்த ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் பளாரென ஒரு அறைவிட்டார். 

ஹர்பஜன் சிங் அறைந்ததையடுத்து, ஸ்ரீசாந்த் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. இச்சம்பவம் அந்த காலக்கட்டத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதன்பின்னர் அன்றைய இரவே இருவரையும் சச்சின் டெண்டுல்கர் சமாதானப்படுத்தி வைத்தார். ஆனால் அந்த சீசனில் அதன்பின்னர் ஹர்பஜன் ஆட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை