ஐபிஎல் அணிகள், வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!

Updated: Sat, Aug 13 2022 13:03 IST
Image Source: Google

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு உள்ள மவுசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐபிஎல் தொடரை போன்று பல்வேறு தொடர்கள் உலகெங்கிலும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாட்டிலும் விரைவில் ஐபிஎல் போன்றே டி20 லீக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 

அப்படி அங்கு நடைபெற இருக்கும் அந்த டி20-லீக்கில் இடம் பெறப்போகும் அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே வாங்கியுள்ளதால் தற்போது அந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதேபோன்று உலகெங்கிலும் நடைபெறும் பல டி20 அணிகளை இந்திய அணியைச் சேர்ந்த உரிமையாளர்களே வாங்குவதால் தற்போது ரசிகர்கள் மத்தியில் வெளிநாட்டு டி20 தொடர்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்திய வீரர்கள் யாரும் இங்கு நடைபெறும் போட்டிகளை தவிர்த்து வெளிநாடுகளில் எவ்விதமான டி20 லீக் தொடரிலும் பங்கேற்க கூடாது என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “இந்தியாவில் விளையாடி வரும் எந்த ஒரு இந்திய வீரரும் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக எந்த ஒரு வெளிநாட்டு போட்டிகளிலும் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்று தெரிவித்துள்ளது. அப்படி ஒருவேளை வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க விரும்பினால் அவர்கள் பிசிசிஐ உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டும். அதோடு பிசிசிஐ உடனான காண்ட்ராக்டையும் அவர்கள் முறித்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிசிசிஐயின் இந்த அறிவிப்புக்கு முன்னதாக, சிஎஸ்கே அணி உரிமையாளர், தென் ஆப்பிரிக்க தொடரில் ஒரு அணியை வாங்கியுள்ளார். இதில் தோனியை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் பிசிசிஐயின் அறிவிப்பால் தோனி இன்னும் உள்நாட்டு தொடரில் இருந்து ஓய்வு பெறாமல் அங்கு செல்ல முடியாது. அவர் முதலில் இங்கு ஓய்வு பெற வேண்டும். அதன்பின்னர் எங்கு வேண்டுமானாலும் சென்று விளையாடட்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருவதைப் போன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வந்தாலும் இன்றளவும் இந்திய வீரர்கள் அங்கு சென்று அந்த தொடரில் பங்குபெற அனுமதி இல்லாமல் தான் இருந்து வருகிறது.

அதே நடைமுறைதான் இனியும் தொடரும் என பிசிசிஐ வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருவேளை அப்படி வெளிநாட்டு போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க விரும்பினால் இங்கிருந்து ஓய்வு பெற்றுவிட்டு முறைப்படி பிசிசிஐ-யின் அனுமதியோடு விளையாடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்திய அணியில் தற்போது நிலவு வரும் கடுமையான போட்டி காரணமாக வாய்ப்பு கிடைக்காமல் ஏற்கனவே சில வீரர்கள் இங்கிருந்து ஓய்வை அறிவித்துவிட்டு வெளிநாடுகளில் சென்று கிரிக்கெட் விளையாடி வருவதை நாம் சமீபத்தில் கண்டு வருகிறோம். இவ்வேளையில் பிசிசிஐ இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை