தமிழ்நாட்டிற்கு 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிஎஸ்கே!
கரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளோன்றுக்கு கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை காட்டிலும், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளே அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (.எஸ்.கே.சி.எல்) கரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (oxygen concentrators) இன்று தமிழ்நாடு அரசிடம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்க ஏற்பாடு செய்தது. இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் முன்னிலையில், சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட் இயக்குநர் ஆர்.சீனிவாசன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.
மேலும் கரோனா நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பூமிகா டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சி.எஸ்.கே.சி.எல் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்க ஏற்பாடு செய்வதில் உதவியதுடன், விநியோகத்தையும் ஒருங்கிணைத்து செயலாற்றி வருகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக ‘மாஸ்க் போடு’ என்ற தலைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.