ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!

Updated: Sun, Apr 28 2024 16:55 IST
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்! (Image Source: Google)

 

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, முன்னாள் சாம்பியன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் அதிரடியாக விளையாடிவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தங்கள் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கட்டுப்படுத்துமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரை மட்டுமே பெரிதும் சார்ந்துள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா முதலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும். அடுத்தடுத்த போட்டிகளில் தடுமாறி வருகிறார். அதேபோல் அஜிங்கியா ரஹானே, டேரில் மிட்செல் ஆகியோரும் அடுத்தடுத்து ரன்களைச் சேர்க்க தடுமாறி வருவது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

பந்து வீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் சிஎஸ்கே வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர் என்பதை மறந்துவிட முடியாது. அணியின் முக்கிய வீரர்களான மதீஷா பதிரனா, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றி வருவதுடன் ரன்களையும் கட்டுப்படுத்தி வருவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்திய பந்துவீச்சாளர்கள் தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, ஷர்தூல் தாக்கூர் போன்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்கி வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

சிஎஸ்கே உத்தேச லெவன்: அஜிங்கியா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கே), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வி.கே), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதீஷா பதிரனா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் இந்த சீசனில் விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகளைச் சந்தித்து 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் நீடித்து வருகிறது. நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்ததுடன், ரன் குவிப்பில் புதிய சாதனை படைத்த அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றியை ருசித்த நிலையில் கடந்த போட்டியில் ஆர்சிபி அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இதனால் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முயற்சியில் அந்த அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அணியின் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், நிதீஷ் ரெட்டி போன்ற வீரர்கள் அபாரமாக செயல்பட்டாலும், மார்க்ரம் சோபிக்க தவறிவருவது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரையில் புவனேஷ்வர், நடராஜன், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக செய்ல்பட்டு வருகின்றனர். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம்/கிளென் பிலீப்ஸ், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை