CWC 2023 Qualifiers: தீக்‌ஷனா, நிஷங்கா அபாரம்; விண்டீஸை வீழ்த்தியது இலங்கை!

Updated: Fri, Jul 07 2023 20:20 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 9ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பிராண்டன் கிங் 10, ஷமார் ப்ரூக்ஸ் 2, கேப்டன் ஷாய் ஹோப் 2, நிக்கோலஸ் பூரன் 14 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜான்சன் சார்லஸும் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய கேசி கார்டி ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மறுமுனையில் கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ், ரோமாரியோ செஃபெர்ட் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேசி கார்டியும் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மஹீஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு திமுத் கருணரத்னே - பதும் நிஷங்கா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்துடன் 190 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய பதும் நிஷங்கா சதமடித்து அசத்தினார். 

பின் 104 ரன்கள் எடுத்த நிலையில் நிஷங்கா விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 83 ரன்கள் எடுத்திருந்த திமுத் கருணரத்னேவும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய குசால் மெண்டிஸ் - சமரவிக்ரமா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் இலங்கை அணி 44.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த மஹீஷ் தீக்‌ஷனா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை