CWC 2023 Qualifiers: நேபாளத்தை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது விண்டீஸ்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை களமிறங்கினர். இதில் கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங்கும் 310 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து சதங்களை விளாச அணியின் ஸ்கோரும் 250 ரன்களைத் தாண்டியது.
பின் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 115 ரன்களை எடுத்திருந்த நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடியாக விளையாடிய ரோவ்மன் பாவெல் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த கேப்டன் ஷாய் ஹோப் 10 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 132 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களைச் சேர்த்தது. நேபாள் அணி தரப்பில் லலித் ராஜ்பான்ஷி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாள் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் குஷால் புர்டெல், பிம் ஷார்கி, ஆசிஃப் ஷேக், கேப்டன் ரோஹித் பௌதெல், குசால் மல்லா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆரிஃப் ஷேக் - குல்சன் ஜா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக செயல்பட்ட ஆரிஃப் ஷேக் அரைசதம் கடந்தார்.
அதன்பின் 63 ரன்கள் எடுத்த நிலௌயில் ஆரிஃப் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட குல்சன் ஷாவும் 42 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இறுதியில் கரண் கேசி அதிரடியாக விளையாடி 28 ரன்களைச் சேர்த்தார். இதனால் 49.4 ஓவர்களில் நேபாள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டன் 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப், கீமோ பால், அகில் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் ஆணி 101 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.