CWC 2023 Warm-Up Game: ஸ்டீவ் ஸ்மித் அரைசதம்; நெதர்லாந்துக்கு 167 டார்கெட்!

Updated: Sat, Sep 30 2023 20:59 IST
Image Source: Google

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் இரண்டாம் நாளான இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியின் தொடங்குவதற்கு முன் மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் களமிறங்கினர். 

இதில் ஜோஷ் இங்கிலிஸ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி 28, கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 55 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் - மிட்செல் ஸ்டார்க் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேமரூன் க்ரீன் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸும் ஒரு ரன்னிற்கும, மேத்யூ ஷார்ட 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.

இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த மிட்செல் ஸ்டார்க் 24 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக், பாஸ் டீ லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை