காமன்வெல்த் 2022: மெக்ராத், மூனி அபாரம்; பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா!

Updated: Wed, Aug 03 2022 20:15 IST
CWG 2022: Beth Mooney and Tahlia McGrath power Australia to big win (Image Source: Google)

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளின் நடப்பாண்டு சீசன் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்ம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 24 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறை மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி, மெக் லெனிங் ஆகியோர் தலா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பெத் மூனி - தஹிலா மெக்ராத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தஹிலா மெக்ராத் 78 ரன்களையும், பெத் மூனி 70 ரன்களையும் சேர்த்தனர்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாதிமா சானா மட்டும் 35 ரன்களைச் சேர்த்திருந்தார். மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை