காமன்வெல்த் 2022: 6 ஓவர்களில் இலக்கை எட்டி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி வீராங்கனைகள் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதிலும் அணியின் கேப்டன் சமாரி அத்தபத்துவைத் தவிர மாற்ற வீராங்கனைகள் ஒற்றையிலக்க ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் 17.3 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நதின் டி கிளெர்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிமையான இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் போஷ், டஸ்மின் ப்ரிட்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6.1 ஓவர்களில் இலக்கை எட்டியது.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.