இந்தியாவின் பேச்சை கேட்டு பாகிஸ்தான் நடக்க வேண்டும்; அட்வைஸ் வழங்கிய டேனீஷ் கனேரியா!
ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என ஜெய் ஷா கூறியதில் இருந்து பிரச்சினை வெடித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்றவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதாவது 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைகாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் வராது என முடிவெடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல், ஆசிய கவுன்சிலில் இருந்து விலகவுள்ளதாகவும் அந்நாட்டு வாரியத்திடம் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு, அந்நாட்டு முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியாவே அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உலகிலேயே பிசிசிஐ தான் பணக்கார கிரிக்கெட் வாரியம். எனவே பிசிசிஐ-க்கு எதிராக பாகிஸ்தான் எதுவுமே செய்ய முடியாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இதே காரணத்திற்காக தான் இந்தியாவிடம் மிகவும் நட்புரீதியாக இருந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் வாரியம் பலவீனமானது.
எனவே பிசிசிஐ சொல்வதை பாகிஸ்தான் வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை செய்வதால் பாகிஸ்தான் தங்களை தாழ்ந்தவர்களாக நினைக்க வேண்டாம். இரு நாட்டிற்கும் இடையே அரசியல் பிரச்சினையும் இருப்பதால், இந்த பிரச்சினையை இப்படியே விட்டுவிட வேண்டும். ஆசிய கோப்பையை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய வாரிய தலைவர்கள் சேர்ந்து மீட்டிங் நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் வரும் வருமானத்தை இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகள் பங்கிட்டு கொள்ளும் நிலையில், இந்தியா அதற்கு அதிக நிதி வழங்கும் நாடாக இருந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரின் போட்டிகளை அதிகரிப்பது தொடர்பான சர்ச்சையிலும் கூட எந்த நாட்டு வாரியமும் எதிர்ப்பு குரல் தெரிவிக்கவில்லை.