IND vs SL: தசுன் ஷனகா தலைமையில் 20 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!
2023ஆம் ஆண்டின் முதல் தொடராக இந்திய அணி இலங்கையுடன் மோதுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகளும் ஜனவரி 3, 5 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. 3 ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12, 15ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டன. அதில் டி20 தொடருக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடரின் கேப்டனாக ரோஹித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் மாவி ஆகியோருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியில் வநிந்து ஹசரங்கா, பதும் நிஷங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டீஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கை அணி: தசுன் ஷனக (கேப்டன்), பதும் நிஷங்க, அவிஷ்க ஃபெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ (டி20 போட்டிகளுக்கு மட்டும்), சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா,அஷேன் பண்டார, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே (ஒரு நாள் போட்டிகளுக்கு மட்டும்), சாமிக்க கருணாரத்ன, தில்ஷன் மதுஷங்க, கசுன் ராஜித, நுவனிது பெர்னாண்டோ (ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும்), துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷன், லஹிரு குமார, மற்றும் நுவான் துஷார (டி20க்கு மட்டும்).