சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள தசுன் ஷனகா!

Updated: Tue, Jun 11 2024 13:28 IST
Image Source: Google

 

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஒன்பதாவது ஐசிசிஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் நாளை அதிகாலை நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம் நேபாள் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பானது கேள்விகுறியாக மாறியுள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தசுன் ஷனகா பங்கேற்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது போட்டியை விளையாடவுள்ளார். இதன்மூலம் இலங்கை அணிக்காக 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் எனும் சாதனையையும் தசுன் ஷனகா படைக்க உள்ளார். இதற்கு முன் வேறெந்த இலங்கை வீரரும் 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணிக்காக கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகமான தசுன் ஷனகா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 99 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 5 அரைசதங்களுடன் 1456 ரன்களைக் குவித்துள்ளார். மேற்கொண்டு பந்துவீச்சில் 32 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதைத்தவிர்த்து கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தசுன் ஷனகா குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். 

இந்நிலையில் நடைபெற்றும் வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் தசுன் ஷனகவின் ஆட்டம் சிறப்பானதாக இல்லை. முதல் இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் 12 ரன்களை மட்டுமே எடுத்துள்ள அவர், பந்துவீச்சிலும் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இதன் காரணமாக இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் ஏறத்தாழ இழந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை