டி20 உலகக்கோப்பை: சாதனை நிகழ்த்த காத்திருக்கும் வார்னர்!
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எதிர்கொள்கின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி மாலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இரண்டு அணிகளும் டி20 உலகக் கோப்பையை இதுவரை வென்றதில்லை.
ஐசிசி தொடர் என்றாலே ஆஸ்திரேலியா தான். கடந்த காலங்களில் ஐசிசி தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியாகவே ஆஸ்திரேலியா இருந்துள்ளது. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் சுமாரான ஃபார்மில் இருந்த ஆஸ்திரேலியா, இப்போது சூப்பர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது.
ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா தனது முதல் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. இந்த உலகக் கோப்பையில் வார்னர் ஃபார்முக்கு திரும்பியது அந்த அணிக்குப் பெரிய நிம்மதி தான். கடந்த ஒரு ஆண்டாகவே தடுமாறி வந்த வார்னர், இப்போது தான் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்.
அவரைத் தவிர வேறு யாரும் ஆஸ்திரேலியா அணியில் சொல்லிக்கொள்ளும்படி பேட்டிங் செய்யவில்லை. வார்னர் 6 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 236 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு அடுத்து எந்த வீரரும் 150 ரன்களை கூட தாண்டவில்லை.
இந்நிலையில், இன்றைய போட்டியில் வார்னர் வெறும் 30 ரன்களை குவித்தால் சூப்பர் சாதனை ஒன்றைப் படைக்கவுள்ளார். இதுவரை இந்த டி20 உலகக் கோப்பையில் 236 ரன்களை எடுத்துள்ள வார்னர், இன்று 30 ரன்கள் எடுத்தால் ஒரே டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையைப் படைப்பார்.
Also Read: T20 World Cup 2021
இதற்கு முன்னதாக கடந்த 2007 உலகக் கோப்பையில் மேத்யூ ஹேடன் 265 ரன்களை எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அடுத்ததாக வாட்சன் 2012இல் 249 ரன்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.